Kidaari Review

சசிகுமார் படம் என்றால் கிராமம், அருவா, வெட்டு, குத்து, கொலை, கொஞ்சம் காதல், காமெடி என்ற பார்முலாதான் சுப்பிரமணியபுரம் படத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள 'கிடாரி' படமும் அதே பாணியில் உள்ளதா? அல்லது வித்தியாசத்தை தொடங்கியுள்ளாரா? என்பதை பார்ப்போம்.
 
தென்மாவட்டத்தை சேர்ந்த சாத்தூரில் வேல.ராமமூர்த்தி வச்சதுதான் சட்டம். அவரை எதிர்க்கும் யாரும் உயிருடன் இருக்க முடியாது. ஏனெனில் அவரை காட்பாதர் போல நினைத்திருக்கும் கிடாரி சசிகுமார் எதிரிகளை வீழ்த்திவிடுவார். சசிகுமார் இருக்கும் தைரியத்தில் ஊரையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வேல.ராமமூர்த்தியை மர்ம நபர்கள் கொன்று விடுகின்றார்கள். சசிகுமாரின் பாதுகாப்பையும் மீறி கொலை செய்தவர்கள் யார்? அவர்களை கண்டுபிடித்து சசிகுமார் பழிவாங்கினாரா? என்பதை அவிழ்க்கும் முடிச்சுகள்தான் இந்த படத்தின் கதை.
 
சசிகுமார் கிடாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். கிராமத்து நடை, உடை, பாவனை எல்லாம் சசிகுமாருக்கு கைவந்த கலை என்பதால் அவர் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். வழக்கமாக ஏற்று நடிக்கும் வேடம் என்றாலும் நடிப்பிலும் ஆக்சனிலும் வித்தியாசத்தை காட்டியுள்ளதால் சலிப்பு தட்டவில்லை.
 
'வெற்றிவேல்' படத்தில் அமைதியான கேரக்டரில் நடித்த நிகிலாவுக்கு இந்த படத்தில் சுட்டித்தனமான வேடம். சசிகுமாரை விழுந்து விழுந்து காதலிப்பது, அவரை கொஞ்சுவது என நடிப்பில் பாஸ்மார்க் வாங்கினாலும் இவருக்கும் மெயின் கதைக்கும் சம்பந்தம் இல்லாததால் படத்தோடு ஒன்றவில்லை. இந்த படத்தில் காதல் காட்சிகளை மொத்தமாக கட் செய்துவிட்டு பார்த்தாலும் எந்தவித பாதிப்பும் இருக்காது.
 
வேல.ராமமூர்த்தி நடிப்பில் மிரட்டியுள்ளார். இவர் இனி எழுதுவதை விட நடிகராக மாறிவிடலாம். சண்டியத்தனமாக நடிப்பில் நன்றாக பயமுறுத்துகிறார். தமிழ் சினிமாவுக்கு இன்னொரு மிரட்டலான வில்லன் கிடைத்துவிட்டார்.
 
இயக்குனர் பிரசாந்த் முருகேசன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். ஆனாலும் முதல் பாதி திரைக்கதை  கொஞ்சம் சலிப்பை வரவழைக்கின்றது. அதை ஈடுகட்டும் வகையில் இரண்டாவது பாதியில் ஹைஸ்பீடில் கொண்டு சென்றுள்ளார். வேல.ராமமூர்த்தியின் கொலையில் இருந்து ஆரம்பிக்கும் படத்தின் கதை நகர்வதற்கு ஏகப்பட்ட பிளாஷ்பேக்குகளை ஹாலிவுட் பாணியில் பயன்படுத்தியுள்ளார். சிலசமயம் பிளாஷ்பேக்குள் ஒரு பிளாஷ்பேக் என்பதால் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஞாபகசக்தி வேண்டும். நெப்போலியன் வரும் பிளாஷ்பேக் மட்டும் மிரட்டல் ரகம். மேலும் ஒருசில இடங்களில் 'பீமா' பிரகாஷ்ராஜ்-விக்ரம் ஞாபகம் வருவதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.
 
படத்தின் மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் தர்புகா சிவா. பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசை அபாரம். தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சிறந்த இசையமைப்பாளர் கிடைத்துவிட்டார்.
 
இயக்குனரின் சிக்கலான கற்பனை, கிராமிய அழகு ஆகியவற்றை கேமிராவிற்குள் பதிவு செய்வதில் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
 

மொத்தத்தில் வழக்கமான கிராமத்து குத்துவெட்டு கதையாக இருந்தாலும் இயக்குனரின் வித்தியாசமான திரைக்கதை, சசிகுமாரின் நடிப்பு படத்தை தேற்றிவிடுகிறது.

Comments

Popular posts from this blog

Jayalalithaa, who came to pay tribute to the persecution that befell Vadivel

DhuruvangalPathinaaru Tamil Movie Review

Modified release film script Suseenthran